ஹதீஸ் கலை - அறிமுகக் குறிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.
எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.
1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.
நான்கு வகைகளையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல்வடிவில் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக்கொள்வார்கள். எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகைளில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
“தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது” என்பது முதலாவது ஹதீஸ்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.
இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர்.
அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார்.
ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.
மேற்கண்ட இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.
இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகிறார். இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.
ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
ஏற்கப்படாத ஹதீஸ்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது “மவ்ளூவு” வகை ஹதீஸ்களாகும். “மவ்ளூவு” என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.
திருக்குர்ஆனுக்கும், நிருபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும் - எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவைகளாக அமைந்தவை.
புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்த தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்
இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களையும் அறிந்து கொள்வோம். முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன்? எப்படி? இந்தச் சமுதாயத்தில் நுழைந்தன? என்பதை அறிந்து கொள்வோம்.
அ) இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.
திருக்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம்ப முடியாத உளறல்களையும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பரப்பலானார்கள்.
இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!
யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும்.
கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும்.
நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத்தன்மையுடையதாக இருந்திருக்கும்.
உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.
ஆகாயத்தில் உள்ள பால் வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண்குஷ்டத்தை ஏற்படுத்தும்
தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.
பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றை பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.
அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும்.
கண்கள் நீலநிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.
மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.
சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.
பெண்களிடம் ஆலோசணை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்.
கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.
160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும்
ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.
இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினார்கள். நடை முறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. கத்திரிக்காய் அனைத்து நோய்க்கும் மருந்தாக இல்லை. மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்துவதும் இல்லை. பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அர்ஷுக்கு கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் இலட்சக்கணக்கான மக்கள் குளித்தும் யாருக்கும் குஷ்டம் வரவில்லை. ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியை பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகுகின்றனர்.
நீல நிறக்கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இரவு, பகல், ஏற்பட்ட பின்தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாக ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.
இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.
0 Comments